எகிறும் தங்கம் விலை.. சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!!
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,232-க்கு விற்பனையாகிறது.
சென்னை, ஜூலை-25

கொரோனாவால் நாட்டில் பொருளாதாரமே நிலைகுலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நேற்று காலையில் தங்கம் விலை சவரன் ரூ39,032க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,904-ஆக விற்பனையாகியது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 39 ஆயிரத்தை கடந்துள்ளது நகை வாங்குவோர் இடையே ஒருவித பீதியை உருவாக்கியுள்ளது.
இந்த வேகத்தில் தங்கம் விலை உயர்ந்தால் இன்னும் சில தினங்களில் சவரன் 40 ஆயிரத்தை தொடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.