ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது.. தமிழக அரசு அதிரடி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, ஜூலை-25

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் பொது அறிவிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுத்தது.
போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்துக்கு இழப்பீடாக ரூ.68.9 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையை செலுத்த ரூ.36.9 கோடியும், ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க 29.3 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது. நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று அரசுடமையாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *