கலாச்சாரத்திற்கு பேர்பெற்ற தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி- பிரதமர் மோடி தமிழில் டுவிட்…

அக்டோபர்-11

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் முறைசாரா உச்சிமாநாடு சந்திப்பு தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்பதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடியின் தமிழகம் வருகை குறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். ”சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *