காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லி, ஜூலை-24

பீகார், உத்தரப் பிரதேசம், கேரளம், அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தற்போது கொரோனா பரவும் சூழ்நிலையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வரை ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, விரைவில் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என செய்தித் தொடர்பாளர் ஷேபள்ளி சரண் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு 6 மாத கால அவகாசம் என்ற விதிமுறைகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.