கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-23

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

“தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக உயர்மட்டக் குழு தன்னுடைய பரிந்துரையில் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி,

  • முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும்.
  • முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.
  • இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும்.
  • முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.
  • அதேபோன்று எம்சிஏ முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவான ஒரு அரசாணை வெளியிட உயர் கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *