இந்தியாவிலேயே 2-வதாக சென்னையில் பிளாஸ்மா வங்கி திறப்பு..! தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை ராஜூவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக 2ஆவதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது
சென்னை, ஜூலை-22

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த ‘பிளாஸ்மா’ சிகிச்சை முறையில் 20 பேரில் 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ வங்கி அமைப்பதற்காக ரூ.2.50 கோடி செலவில் நவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அங்கு ஒரே நேரத்தில் 7 பேர் வரை ‘பிளாஸ்மா’ தானம் அளிக்கலாம். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட 14 நாள்களுக்கு பின்பு பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.
சென்னையில் ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி இன்று திறக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவின் போது அமைச்சர்கள், மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பிளாஸ்மா வங்கியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் செய்தார்.

இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக 2ஆவதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது ;-
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் ரூ.2.34 கோடி மதிப்பில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா வங்கி திறக்கப்படும். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, திருச்சி, நெல்லை, மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்கப்படவுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வர வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு தானம் அளிக்கலாம். தானம் பெறும் பிளாஸ்மாவை ஓராண்டு வரை பயன்படுத்தலாம். கொரோனா உயிரிழப்புகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற காரணங்களால் இறந்தவர்களையும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களாக கருதுமாறு ICMR தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே உயிரிழப்புகள் குறித்த விவரம் வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.