தமிழக அரசை பாராட்டிய ரஜினிக்கு அமைச்சர் S.P.வேலுமணி நன்றி..!

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-22

கந்தசஷ்டி விவகாரம் குறித்த சர்ச்சை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக கருத்து பதிவிட்டார். அதில், கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த அந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத் துவேஷமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே கந்தனுக்கு அரோகரா… என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி கூறி அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்
அதில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு, சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது.அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும், மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து, பாகுபாடு இல்லாத சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *