கொரோனா தடுப்பு பணி.. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394.14 கோடி நிதி..!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து இதுவரை ரூ.394.14 கோடி நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை-22

கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு அறிவித்திருந்தது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-யின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி தொடர்பான தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து இதுவரை ரூ.394.14 கோடி நிதி சேர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜுலை 21 ம் தேதி வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளின் சார்பாக ரூ.394.14 கோடி நிதி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 21.7.2020 முடிய இதுவரை ரூ.394.14 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. மனமுவந்து நிதியுதவி அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


