திருமணத்துக்கு சென்றதால் நிகழ்ந்த கொடூரம்.. கொரோனாவுக்கு தாய் மற்றும் 5 மகன்கள் பலி..!
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தாய் மற்றும் அவரது 5 மகன்கள் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி, ஜூலை-22

ஜார்க்கண்ட் மாநிலம் கட்ரஸ் கிராமத்தில் இருந்து டெல்லியில் நடந்த உறவினர் திருமணத்துக்குச் சென்று வந்த 88 வயதான மூதாட்டிக்கு, வீடு திரும்பிய ஓரிரு நாள்களில் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைய, அவரது இறுதிச் சடங்கு முடிந்த பிறகுதான் அவருக்கு கொரோனா இருக்கிறது என்ற பரிசோதனை முடிவு வெளியானது.
இதனால், எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இன்றி நடத்தப்பட்ட இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், தான் தாய் இறந்து 16 நாள்களில் அவரது 6 மகன்களில் 5 மகன்கள் ஒருவர் பின் ஒருவராக கொரோனாவுக்கு பலியாகினர். அனைத்து மகன்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். கடைசியாக 5வது மகன் கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராணி குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், ராணி வீடு உள்ள கட்ரஸ் பகுதி முழுவதையும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து அப்பகுதியை முற்றிலும் அடைத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் ஒற்றை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று தாய் மற்றும் அவரது 5 மகன்கள் வைரஸ் தாக்குதலுக்கு 16 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை மட்டுமல்லாமல் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.