இந்த முகக்கவசத்தை பயன்படுத்தாதீர்கள்.. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை

வால்வு பொருத்தப்பட்ட என்.95 முகக்கவசம் பயன்படுத்துவது கொரோனா பரவலை தடுக்காது. மாறாக கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

டெல்லி, ஜூலை-22

முகக்கவசம் அணிவது தொடர்பான கடிதம் ஒன்றை, மத்திய சுகாதார சேவைகளின் பொது இயக்குநர், மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- வால்வுடன் கூடிய என்.95 முகக்கவசம், கொரோனா பரவலை கட்டுப்படுத்தாது. மாறாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பொதுமக்கள் என்95 வால்வு முகக்கவசத்தை பயன்படுத்தக் கூடாது என மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

காற்று வெளியே வந்து செல்ல வசதியாக முகக்கவசத்தில் அமைக்கப்படும் வால்வுகள் பிரத்யேகமாக மருத்துவத் துறையினருக்காக தயாரிக்கப்படுவை. அந்த முகக்கவசங்களை பொதுமக்கள் தவறான முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வால்வுகள் பொருத்தப்பட்ட என்.95 முகக்கவசங்கள், கொரோனா தொற்றில் இருந்து காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வு மூலம் வெளிக் காற்றில் இருக்கும் மிகச் சிறிய திவளையில் இருக்கும் கொரோனா தொற்று கூட வடிகட்டுப்படும். இது மூக்கு மற்றும் வாய்ப் பகுதியின் அருகே மூடப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது பிரத்யேகமாக சுகாதாரத் துறையினருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது, சில என்.95 முகக்கவசங்களில் இருக்கும் வால்வுகள் ஒரு வழி திறப்புப் பாதை கொண்டதாக இருக்கும். அதாவது உள்ளே இருந்து காற்று எளிதாக வெளியேறும் வகையில் இருக்கும். அது வடிகட்டப்படாது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட என்.95 முகக்கவசங்களை அணியும் போது, வெளியில் இருந்து அந்த முகக்கவசத்தை அணிபவருக்கு வேண்டுமானால் கொரோனா பரவாது. ஆனால், அணிந்திருப்பவருக்கு கொரோனா இருந்தால், அது அவரது வால்வு கொண்ட முகக்கவசத்தின் மூலம் வெளியே சென்று அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

முகக்கவசம் என்பது, கொரோனா தொற்று பிறரிடம் இருந்து முகக்கவசம் அணிந்திருப்பவருக்கும், முகக்கவசம் அணிந்திருப்பவரிடம் இருந்து பிறரையும் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. ஆனால் ஒரு வழி திறப்பு வால்வுகள் கொண்ட என்.95 முகக்கவசங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை. அதே சமயம், இரு வழிப் பாதை கொண்ட என்.95 முகக்கவசங்கள், உள்ளே இருந்து காற்று சுத்திகரிக்கப்பட்டு வெளியேயும், வெளியே இருக்கும் காற்று சுத்திகரிக்கப்பட்டு உள்ளேயும் அனுப்பப்படுகிறது. இதுதான் மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படுகிறது. மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வேறுபாட்டை அறியாமல், பொதுமக்கள் ஒருவழித் திறப்பு கொண்ட என்.95 முகக்கவசங்களை அணியும் போது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும் போது சாதாரண துணியால் செய்த முகக்கவசத்தை அணிவதே சிறந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *