சென்னை காசிமேடு துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன்விற்பனை செய்ய அனுமதி

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-21

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கொரோனா நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்திட பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், சென்னை (வடக்கு), மீன்துறை இயக்குநர், விசைப்படகு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 15.07.2020 முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன. மீன்பிடித் துறைமுகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தபோதும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிரமங்கள் ஏற்படுவதால் அவற்றினை களைந்து மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்திடவும், சமூக இடைவெளியினை உறுதி செய்திடவும் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

 1. ஒரு நாளில் 50 முதல் 70 எண்ணிக்கைக்கு மிகாமல் விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும்.
 2. ஒரு நாளில் 50 விசைப்படகுகளுக்கு மட்டுமே மீன்பிடி இறங்குதளத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
 3. மீன்விற்பனைக்கென குறிப்பிட்ட, அதிகாலை 3.00 மணி முதல் காலை 8.00மணி வரை மட்டுமே மீன்விற்பனை செய்ய வேண்டும்.
 4. எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் மீன் வாங்க துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 5. மீன் கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
 6. சிறிய மீன்களை கொள்முதல் செய்ய தினசரி சுமார் 600 நடுத்தர மீன் விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
 7. நடுத்தர வியாபாரிகள் 150 நபர்களை கொண்ட குழுவாக துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஒரு குழு மீன் கொள்முதல் செய்து வெளியேறிய பின்னரே அடுத்த குழு மீன் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுவர்.
 8. அடையாள அட்டை வழங்கப்பட்ட படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மட்டுமே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
 9. தினசரி கடலுக்குள் செல்லும் மற்றும் கரை திரும்பும் விசைப்படகுகள் பதிவு எண், புறப்படும் நாள், நேரம், உத்தேசமாக கரை திரும்பும் நாள் மற்றும் நேரம் போன்ற விபரங்களை மீனவர்கள் மீன்துறைக்கு தவறாமல் தெரியப்படுத்திட வேண்டும்.
 10. மீன் விற்பனை நேரத்திற்கு பின்னர் அதாவது காலை 8.00 மணிக்கு பின்னர் கரை திரும்பும் விசைப்படகிற்கு மீன்விற்பனை செய்ய அனுமதியில்லை. அவர்கள் மறு நாள் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர்.
 11. விசைப்படகுகள் எக்காரணம் கொண்டும் நாட்டுப்படகுகள் விற்பனை செய்யும் இடத்தில் மீன் விற்பனை செய்யக் கூடாது.
 12. மீன்பிடித் துறைமுகத்திற்குள் அன்றைய தினம் மீன் விற்பனை செய்யும் படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 13. படகுகள் மற்றும் இயந்திரங்கள் பழுது பார்ப்பதற்காக செல்லும் தொழிலாளர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் மீன் விற்பனை முடிந்த பின்னர் மட்டுமே மீன்பிடித் துறைமுகத்திற்குள் செல்ல வேண்டும்.
 14. மேற்கண்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் 21.07.2020 முதல் அமலுக்கு வரும். மேற்கண்ட நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *