மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்.. ஜனாதிபதி, மோடி இரங்கல்
மத்திய பிரதேச மாநில ஆளுநராக இருந்த லால்ஜி டாண்டன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி, ஜூலை-21

மத்திய பிரதேச ஆளுநராக இருந்த லால்ஜி டாண்டன் (85) மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் சிகிச்சை பலனின்றி காலமானார். லால்ஜி டாண்டன் மறைந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஸ்ரீ லால்ஜி டாண்டன் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக எடுத்த முயற்சிகள் நினைவில் கொள்ளப்படும். லால்ஜி டாண்டன் ஒரு திறமையான நிர்வாகி, பொது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். உத்தரப்பிரதேச பாஜக-வின் வளர்ச்சியில் லால்ஜி டாண்டனின் பங்கு அளப்பரியது.’’ எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லால்ஜி டாண்டன் உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங் அரசில் அமைச்சராக இருந்து உள்ளார். பின்னர் பாஜக-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.