திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!
திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி, ஜூலை-21

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5ந்தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சித்தூா் மாவட்ட ஆட்சியா் நாராயண பரத் குப்தா கூறியதாவது:
திருப்பதியில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தூா் மாவட்டத்தில் பலி எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் திருப்பதியில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. காளஹஸ்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், அங்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலில் உள்ள நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணிவரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மதுந்துக் கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்கும். அதற்கு பின் பால், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். நகர மக்கள் பகல் 11 மணிக்குப் பிறகு வெளியில் நடமாட அனுமதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.