மக்களுக்கு பீதி ஏற்படுத்துவதா? – ஸ்டாலினுக்கு S.P.வேலுமணி கண்டனம்
மீண்டும் மீண்டு வரும் சென்னையை பீதிக்குள் ஆழ்த்துவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை-21

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில்,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது வழிகாட்டுதலில் அமைச்சர்களும் அதிகாரிகளும் அனைத்து முன்களப் பணியாளர்களோடு இணைந்து முன்களப் பணியாளர்களாகவே களத்தில் தைரியமாக நின்று செயல்பட்டு அயராது பாடுபட்டு சென்னையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தியுள்ளனர். பெங்களூரு, மும்பை, புதுடில்லி நகரங்கள் முழுவதுமாக இன்னமும் முடங்கியுள்ள நிலையில் நாட்டிலேயே அதிக பரிசோதனைகளையும் காய்ச்சல் முகாம்களையும் வீடு வீடாக வீதி வீதியாக நடத்திய நகராக திகழும் சென்னையை பெருமையுடன் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் சூழலில் நோய்த்தொற்று விகிதத்தை அரும்பாடுபட்டு 9.12% என்ற ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டு வந்து சென்னையின் எட்டு மண்டலங்களில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு மாபெரும் நம்பிக்கையை மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மாநகராட்சி சாதித்து காட்டியுள்ள நிலையில் கொரோனாவை வைத்து மக்களை பயமுறுத்தி அறிக்கை அரசியல் செய்யும் முழுநேர மலிவு அரசியல்வாதியாகவே திகழும் நீங்கள், அரசின் முயற்சிகளை பாராட்டாவிடினும் தலைநகர் சென்னையை சீனாவுக்கு இணையாக உருவகப்படுத்தி தொடர்ந்து அவமதித்து சென்னை வாழ் மக்களை மீண்டும் மீண்டும் பயத்திலும் பீதியிலும் வைத்திருப்பது தான் எதிர்க்கட்சி் தலைவரான உங்களது ஒரே குறிக்கோளா!?
அரசை விடுங்கள், மீண்டு வரும் சென்னை மக்களின் நம்பிக்கையை மனதார பாராட்டுங்கள். சென்னையின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கை புள்ளிவிரங்களை உங்கள் அறப்போர் அறிவுக்கண் கொண்டு பாருங்கள்.
மக்களை பயமுறுத்தி பீதிக்குள்ளாக்கும் மனநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டு விரைவில் குணமடையுங்கள்!
இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
