முருகர் அவமதிப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? அமைச்சர் S.P.வேலுமணி கேள்வி

சென்னை, ஜூலை-18

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் ஒரு மதத்தினரின் நம்பிக்கையை இழிவுப்படுத்தும் வகையில், இணையத்தில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் அவதூறு பரப்பபடுகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஊக்குவிக்கின்றன என்று புகார் எழுந்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் இதுவரை விளக்கமோ, கண்டனமோ, தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பல விவகாரங்களுக்கு முந்திக் கொண்டு அறிக்கை வெளியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாத்தில் அடக்கி வாசிப்பதின் பின்னணி குறித்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் இன்றுதமது ட்விட்டர் பதிவில், தேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்க்கு வரும் போலும். கோவில் கோவிலாக படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட்ட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின், உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன!? என்று எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகங்கள் எழுப்பபடுவதாலா!? என்றும், அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா!? என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வினா எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *