சச்சின் பைலட், 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ப்பூர், ஜூலை-17

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் சச்சின் பைலட் தனியாக ஒரு அணியாகச் செயல்படத் தொடங்கியதால் ஆளும் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதில் சச்சின் பைலட், விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோர் வராததால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதற்காக சச்சின் பைலட்டை மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியும், துணை முதல்வர் பதவியைப் பறித்தும் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல, அமைச்சர்களாக இருந்த விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரின் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் கொறடாவுமான அவினேஷ் பாண்டே, சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம், காங்கிரஸ் சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வராத 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

சச்சின் பைலட் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத அவரின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி சபாநாயகர் கோரியுள்ளார். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பினர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதன்படி இன்று சச்சின் பைலட் மனு மீதான விசாரணை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. விசாரணை முடிவில் சச்சின் பைலட் மற்றும் 18 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி-க்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சபாநாயகர் விடுத்திருந்த காலக்கெடுவிற்கு சற்று முன் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *