அமைச்சரின் மகனை கைது செய்த பெண் போலீஸ் ராஜினாமா.. குஜராத்தில் பரபரப்பு..!

ஊரடங்கை மீறியதாக குஜராத் மந்திரியின் மகனை கைது செய்த பெண் போலீஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். உயர்அதிகாரிகள், அரசியல்வாதிகளின் நெருக்கடி காரணமாக போலீஸ் ஏட்டு ராஜினாமா செய்தாரா? என மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரத், ஜூலை-17

குஜராத் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குமார் கனானி. இவரது மகன் ராஜேஷ் கனானி. கொரோனா பரவல் காரணமாக சூரத் நகரில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த வாரம் ஊரடங்கை மீறி மந்திரியின் மகன் மற்றும் அவரது 2 நண்பர்கள் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.

அப்போது ரோந்துப்பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு சுனிதா யாதவ், மந்திரியின் மகன் என்றும் பாராமல் அவர்களை கண்டித்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து மந்திரியின் மகன் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.

இதற்கிடையே மந்திரியின் மகன் என்றும் பாராமல் துணிச்சலாக நடவடிக்கை எடுத்த சுனிதா யாதவ்வை சமூகவலைத்தளங்களில் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சிலர் ‘பெண் சிங்கம்’ என்று அவரை புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர்.

சிலர் ஒருபடி மேலே போய், 2022-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் மந்திரி குமார் கனானிக்கு எதிராக சுனிதா யாதவ் களம் இறங்க வேண்டும் என்றும் கூறி தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் டுவிட்டரிலும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில், சுனிதா யாதவ் தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் பணியை ராஜினாமா செய்கிறேன். நான் ஒரு போலீஸ் ஏட்டாக எனது கடமையை தான் செய்தேன். இது நமது ‘சிஸ்ட’த்தின் தவறு. ஒரு மந்திரி மகன் என்பதால், அவர்கள் தங்களை மிகமிக முக்கிய நபர்கள் (வி.வி.ஐ.பி.) என்று நினைத்துக்கொள்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் பெண் போலீஸ் ஏட்டு ராஜினாமா செய்யவில்லை என்று சூரத் போலீஸ் கமிஷனர் ஆர்.பி.பிரக்ம்பத் கூறியுள்ளார். வழக்கு விசாரணை நடக்கும்போது, ராஜினாமா செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *