நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுத்தர மாட்டோம்.. ராஜ்நாத் சிங் திட்டவட்டம்..!

நமது நாட்டின் ஒரு அங்குல பகுதியை கூட அந்நியர்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

லடாக் , ஜூலை-17

லடாக் எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்தார். எல்லையில் படைகள் வாபஸ் பெறுவது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தை நீடித்து வரும் நிலையில், எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அவர் தனி விமானத்தில் லடாக் சென்றார். லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

அங்கு இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்திகைகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதி எம்.எம். நரவானே ஆகியோரும் எல்லைப் பாதுகாப்பு நிலைமையை பார்வையிட்டனர்.

இதன்பின் லுகுங் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங்,’ எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், தீர்வு எட்டப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது.நம்முடைய நிலத்தின் ஓர் அங்குல பகுதியை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். பேச்சுவார்த்தை வழியே தீர்வு காணப்பட்டால், அதனை விட சிறந்த ஒன்று எதுவும் இருக்காது.உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சமீபத்தில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நம்முடைய வீரர்களில் சிலர் செய்த உயிர் தியாகத்திற்காக நான் வருத்தமடைகிறேன். அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *