தலைவர் பதவியிலிருந்து விலகிய ஷிவ் நாடார்.. மகள் ரோஷிணியிடம் வந்த ஹெச்சிஎல்..!

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான ஷிவ் நாடார் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.அவருக்குப் பதில், அவரது மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா அப்பொறுப்பை ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூலை-17

ஐ.டி துறையில் ஆசியாவின் மிகச்சிறந்த 50 நிறுவனங்களில் ஹெச்.சி.எல். நிறுவனமும் ஒன்றாகும். உலகம் முழுவதும் 44 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனம், ஆண்டுக்கு 8.6 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. இதன் தலைவராக இருந்த ஷிவ் நாடார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் அம்சமாகும். ஷிவ் நாடாரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் அருகில் உள்ள மூலைப்பொழி என்ற சிறிய கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மிகப் பெரிய தொழிலதிபரான இவர் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். அதன் மூலம் கல்வி, நன்கொடை உள்ளிட்ட சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷிவ் நாடார், இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தற்போது நிர்வாகம் சாரா இயக்குநராக இருந்துவரும் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, ஜூலை 17, 2020 முதல் இயக்குநர்கள் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷிவ் நாடார் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தாலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் நிறுவனங்களும் மற்றும் மக்களும் பல்வேறு விதமான பிரச்சனைகளைத் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். இதனால் வர்த்தகப் பாதிப்பின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால் இந்தக் காலகட்டத்தை நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்களைச் செய்யப் பயன்படுத்த உள்ளோம், இந்த மாற்றம் நிறுவன வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் என நம்புகிறோம் என ஷிவ் நாடார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

38 வயதாகும் ரோஷினி மல்ஹோத்ரா 2019 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 54ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *