கொரோனா பாதிப்பில் இருந்து அமைச்சர் நிலோபர் கபில் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.. முதல்வர் ட்விட்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கஃபீல் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை, ஜூலை-17

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அமைச்சர் நிலோபர் கபில் மகன், மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலோபர் கபில் சமீபத்தில் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தார். சில நாட்களாக அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதன் காரணமாக அவர் கடந்த 14-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பிலும் இருந்து வருகிறார்.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் நிலோபர் கபில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கஃபீல் அவர்களுக்கு கொரோனா தொற்று என்ற செய்தி அறிந்ததும், அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.