தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று ஈரோட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

ஈரோடு, ஜூலை-17

இது தொடர்பாக ஈரோட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா காலத்தில் மக்கள் நலப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.

அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கீழ்பவானி கால்வாயை ரூ.985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பகுதி மக்களுக்கான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2020-21-ம் ஆண்டின் மேட்டூர் கால்வாயை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்பணி தொடங்கியுள்ளது. ஈரோடு நகருக்கான வெளிவட்ட சுற்றுச்சாலை விரைவில் அமைக்கப்படும். மேலும் கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திமுக போராட்டம் நடத்துகிறது. உரிய முறையில் மின்சார கணக்கீடு நடைபெறுகிறது. கொரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தற்போதைக்கு எண்ணம் இல்லை எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *