ரூ.151 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை ஈரோட்டில் முதல்வர் தொடங்கி வைத்தார்..
ஈரோட்டில் ரூ.151 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
ஈரோடு, ஜூலை-17

3 நாள் பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள தமிழக முதல்வர் இன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதோடு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில் 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.76.12 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 4,642 பயனாளிகளுக்கு ரூ.53.71 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.151.57 கோடி மதிப்பிலான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துறை முதன்மை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள், சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, இறப்பு விகிதம், தடுப்பு நடவடிக்கைகள், இலவச மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.