கூட்டணிக்காக தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைக் காவுகொடுத்திடாதீர்கள்.. முதல்வருக்கு விசிக வலியுறுத்தல்

காவிரிநீரில் தமிழகத்தின் பங்கைப் பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஜூலை-16

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

காவிரியில் ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரின் அளவை காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ளது. அதன்படி ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரும் ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள காவிரி நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு உரிய விதத்தில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கொரோனா பேரிடர் காலத்தில் எல்லா தொழில்களும் முடங்கிவிட்ட நிலையில் விவசாயத்தை மட்டுமே நாம் பெரிதும் நம்பி இருக்கின்றோம். ஜூன்-12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டபோதிலும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவிரியில் நமக்குத் தரப்பட வேண்டிய தண்ணீரைத் தராமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருவது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்குச் சேரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் வழங்காமல் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாமதப்படுத்தியே வந்துள்ளது. இந்த ஆண்டும் அவ்வாறுதான் அது நடந்து கொள்கிறது. ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களுக்கும் சேர்த்து 40.43 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்கவேண்டும் என ஜூன் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதன் தலைவர் ஆர்.கே. ஜெயின் உத்தரவு பிறப்பித்தார். கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பொழிந்துள்ள நிலையிலும் இதுவரை 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நேற்று ( 14.07.2020) நடைபெற்ற கூட்டத்திலும் தமிழகத்துக்குச் சேரவேண்டிய நீரைத் தரவேண்டும் என மிகவும் மென்மையாகவே கூறப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் மெத்தனத்தையே காட்டுகிறது.

தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டியது தமிழக முதல்வரின் கடமையாகும். தனது கூட்டணிக் கட்சியான பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தித் தமிழகத்தின் உரிமையைத் தமிழக முதலமைச்சர் நிலைநாட்ட வேண்டும். தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் கூட்டணிக்காக தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைக் காவுகொடுத்திட வேண்டாம் என சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *