இந்தியாவை போல் டிக் டாக்கை தடை பண்ணுங்க.. அதிபர் ட்ரம்பிடம் அடம்பிடிக்கும் அமெரிக்க எம்.பி.க்கள்..!
இந்தியாவை போல டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 25 எம்.பி.க்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
வாஷிங்டன், ஜூலை-16

இந்திய லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜுன் 29-ம் தேதி டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம்ஸ்கேனர், வீ-சேட் உட்பட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. இந்தச் செயலிகள் இந்தியப் பயனாளிகளின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்திவருவதால் நாட்டின் பாதுகாப்பு கருதி அவற்றை தடைசெய்கிறோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு குடியரசு கட்சியைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள் அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. இந்த செயலிகளின் மூலம் அமெரிக்கர்களின் தகவல்கள் எளிதாக திருடப்பட வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 60 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை உதாரணமாகக் கொண்டு அமெரிக்க அரசும் செயல்பட வேண்டும். அமெரிக்க மக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கையை அதிபர் எடுக்க வேண்டும். அமெரிக்கர்களின் தரவு, தனியுரிமை அல்லது பாதுகாப்பைப் பாதுகாக்க டிக்டாக் அல்லது சீனாடன் இணைந்த சமூக ஊடக வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளை அமெரிக்கா நம்பக்கூடாது. நமது நாட்டிற்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிநவீன உளவு பிரச்சாரத்தை நிறுத்தவும், நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.