வெள்ளக்காடான ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனை.. கொரோனா நோயாளிகள் தவிப்பு..!

தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஐதராபாத், ஜூலை-16

பீகார், அசாம், டெல்லி, மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஐதராபாத்தில் சிலமணி நேரம் பெய்த மழைக்கு உஸ்மானியா அரசு மருத்துவமனை வெள்ளத்தில் மிதந்தது.

நாட்டின் மிக பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் ஒன்றான இதில், உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோன்று கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டிலும் மழைநீர் புகுந்தது. இதனால் மழை நீரிலேயே நோயாளிகள் சிகிச்சைபெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீரும் சேர்ந்ததால் நோயாளிகளும் , மருத்துவர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

மருத்துவர்களும், செவிலியர்களும் வார்டுகளுக்கு வருவதை தவிர்ப்பதாக நோயாளிகள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுடன், சிகிச்சை பெறும் நோயாளிகளும் பல மணிநேரம் ஒன்றாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மருத்துவமனைக்குள் வெள்ள நீர் தேங்கி கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *