கொரோனா தடுப்பு பணிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு?-.. இணையத்தில் வெளியிட உத்தரவு

கொரோனா தடுப்பு பணிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரத்தில் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, ஜூலை-16

சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த கற்பகம் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கினை தொடர்ந்திருந்தார். அதில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கொரோனா நிவாரண நிதி பெற்றவர்கள் பெயர்கள் பட்டியல், பயனாளிகள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இணையதளத்தில் எந்தவொரு விவரமும் இடம்பெறவில்லை என்றும், எனவே அது தொடர்பாக அரசு, இணையதளத்தில் நன்கொடை அளித்தவர்கள் யார்?, யாரெல்லாம் பயனாளிகள், எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.என். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் கொரோனா நிதியாக 100 ரூபாய் கூட பல லட்சம் பேர் கொடுத்துள்ளனர். அந்த விவரங்களை எல்லாம் கணக்கிட்டு இணையத்தில் வெளியிடுவது மிகவும் சிரமம் என தெரிவித்தனர்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது? அதில் யார், யார் எவ்வளவு தொகை கொடுத்தார்கள்? எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற முழு விவரத்தை அடுத்த 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *