கோவையிலும் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம் – S.P. வேலுமணி

கோவை, ஜூலை-16

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு 5 ரோபோடிக் 2.0 இயந்திரங்கள் ,உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இன்று வழங்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம் தனது CSR நிதியில் இருந்து 2.12 கோடி ரூபாய் செலவில் இந்த ரோபோக்களை வழங்கியது.

இதனையடுத்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது எனவும்,
இதுவரை 80623 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1591 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.வாகனங்கள் மூலம் அனுமதி இன்றி கோவைக்குள் நுழைவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 என்ற இயந்திரம் இன்று கோவை மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ளது எனவும், இது பயன்பாட்டிற்கு வரும் போது மனித கழிவுகளை மனிதர் அகற்றும் சூழல் இல்லாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள 34 நகரங்களுக்கும் கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 இயந்திரம் வழங்கப்பட இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் கொரொனா நோய் தொற்று அதிகமாக வர துவங்கி இருக்கின்றது எனவும், இரு சக்கர வாகனங்களில் அனுமதி இன்றி வருபவர்களால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுஎனவும் தெரிவித்த அமைச்சர்,வெளியூரில் இருந்து யாராவது அனுமதி இன்றி வந்திருப்பது தெரியவந்தால் உடனடியாக பொது மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.கொரொனா தொற்று ஏற்பட்டவர்களை அன்பாக பாதுகாத்தாலே நோய் குணமாகி விடும் என கூறிய அவர்,மாஸ்க் போடாதவர்களிடம் பேசாதீர்கள் எனவும், அவர்களிடம் இருந்து விலகி இருங்கள் எனவும் தெரிவித்தார்.

மாநகராட்சியின் ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கொரோனா தொற்று வந்து கொண்டு இருக்கின்றது எனக்கூறிய அவர் அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பரிசோதனை முடிவுகள் தாமதம் ஏற்பட கூடாது என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறிய அவர், முழு ஊரடங்கு இப்போது தேவையில்லை எனவும் தெரிவித்தார். தேவைப்பட்டால் மருத்துவதுறை ஆய்வு செய்து தெரிவிப்பார்கள் என கூறிய அவர்,முழு ஊரடங்கு கொண்டு வந்தால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்பார்கள் எனவும் கூறிய அமைச்சர் வேலுமணி, அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு தேவைப்படாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *