”நெருக்கடியில் சோறு போட்ட அரியூர் பிள்ளையை மறக்காத காமராசர்..!”

இந்தக் கட்டுரை அரியூர் அருணாசலம் பிள்ளையின் பேரன் பதிவு…

ஶ்ரீவில்லிபுத்தூரில்”பிரமானந்த விலாஸ் ஹோட்டல்”என்ற பெயரில் அப்போதிருந்த நீதி மன்றத்துக்கு எதிரில் அரியூர் அருணாசலம் பிள்ளை வைத்திருந்தார்.அப்போது வெள்ளைக்காரன் பிரிஸ்ட்டீசாரின் ஆட்சிக்காலம்.சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்தது.காமராசர்,முத்துராமலிங்கத்தேவர்,போன்ற தலைவர்கள் காட்டுக்குள்ளும்,பாசண சிமிண்ட் குழாய்களுக்குள்ளும் போலீஸிடம் பிடிபடாமல் ஒளிந்திருப்பார்கள்.அவர்கள் ஒளிந்திருக்கும் இடம் பற்றி எனது தாத்தாவிற்கு தகவல் தந்துவிடுவார்கள்.அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்திற்கு எனது அப்பா திரு.அணைந்த பெருமாள் பிள்ளைதான் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்து வருவாரகள்.அப்போது என் அப்பாவிற்கு 15,16 வயது இருக்கலாம்.

எனது அப்பாவிற்கு திருமணம் முடிந்த பின்பு மனைவியோடு மதுரைக்கு பிழைக்க வந்தார்கள்.எனது தாத்தா இறந்துவிட்டார்.உடன் பிறப்புகளுக்குள் ஒற்றுமை இல்லை. மதரை,பழங்கானத்தத்தில் தினமலர் அலுவலகம் இருந்த இடத்தில் “மதுரை ரோட்வேஸ்”என்ற பெயரில் சிங்கம்புணரி செட்டியார் பஸ் கம்பெனி நடத்திவந்தார்.அது அவர் சொந்த இடம்.பஸ் கம்பெனி முதலாளிக்கு எங்கள் கடையில் இருந்துதான் காபி வாங்கிச்செல்வார்கள்.காபியை சாப்பிட்டு விட்டு முதலாளி,எங்கப்பாவை பார்க்க விரும்புவதாக,கடைக்கு காபி வாங்க வரும் ஊழியர் சொல்வார். எனது அப்பாவிற்கு 38,40 வயது இருக்கும்போது அந்த பஸ் கம்பெனி புதிதாக கட்டப்பட்டு,காமராசர் அவர்களால் திறப்புவிழா செய்யப்பட இருந்தது.

இந்த திறப்புவிழாவை பயன்படுத்தி,பஸ் முதலாளி என் அப்பாவிற்கு அழைப்பிதழ் அனுப்பி,கண்டிப்பாக விழாவிற்கு வர வேண்டும்,முதலாளி உங்களை பார்க்க ஆசைப்படுகிறார் என்று அழைப்பிதழ் கொடுக்க வந்த ஊழியன் சொன்னான்.எனது அப்பாவும் சென்றார்.ஊழியர் முதலாளியிடம் என் அப்பாவை அறிமுகம் செய்து வைக்க,முதலாளி என் அப்பாவை இன்முகத்துடன் வரவேற்று முதல் வரிசையில் அமர வைத்தார்.

காமராசர் மேடைக்கு வந்து அமர்ந்து,முன் வரிசையில் இருந்த என் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.பின் அருகில் நின்ற ஒருவரை அழைத்து,என் அப்பாவை காமராசர் மேடைக்கு வரச்சொன்னார்.என் அப்பாவைப் பார்த்து’நீ ஶ்ரீவில்லிபுத்தூர் அரியூர் பிள்ளை மகன்தானே?என்று கேட்டார்.எனது அப்பாவிற்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது.

சிறு வயதில் நடந்ததை எப்படி ஞாபகம் வைத்துள்ளார் என்று.எனது அப்பா பதிலாக “ஆமாம் நான் அரியூர் பிள்ளை மகன்தான்”என்று சொன்னவுடன்,காமராசர் என் அப்பாவை கட்டித்தழுவி “உன்னை எப்படியப்பா மறக்கமுடியும்?சுதந்திர போராட்ட காலத்தில் எனக்கு சோறு போட்டவனாயிற்றே”என்று கூறி ‘இங்கே நீ என்ன செய்கிறாய் என்று கேட்டார்.என் அப்பா ‘காபி கிளப்’ நடத்துகிறேன்’என்று கூற,காமராசர்’ உனது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?என்று கேட்க ‘சிறு பையன்கள் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்’என என் அப்பா சொன்னார்.காமராசர் நான் ‘உன் குடும்பத்திற்கு உதவி செய்தே ஆகவேண்டும்.என்ன உதவி வேண்டுமானாலும் என்னை வந்து பார் ” என்று கூறினார். இதைப் பார்த்து முதலாளி உட்பட அனைவரும் வியந்து பாரத்தார்கள்.

காமராசரைப் பற்றி அவர் ஒருமுறை ஒருவரை பார்த்து விட்டால்,எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் வைத்திருக்கும் அற்புதமான நினைவாற்றல் உள்ளவர் என்று சொல்வார்கள்.அது சரிதான். என் கண்களில் கண்ணீரோடு இதை எழுதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *