அவதூறுகளைத் திட்டமிட்டுப்பரப்பி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.. கே.என்.நேரு அறிக்கை..!

அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்புவதன் மூலமாக திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள் என கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை, ஜூலை-15

இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

திமுக கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் உயர்வுக்காகவும் பாடுபட்டு வரும் ஓர் இயக்கம். இது ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமூக மேம்பாட்டு இயக்கமும் ஆகும். நாட்டு மக்களின் மேன்மையையே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இயக்கம்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் உயர்வுக்காக நித்தமும் இயங்கி வரும் இயக்கம். இந்தக் கொரோனா காலத்திலும் அதனை மெய்ப்பித்து இருக்கிறோம். இத்தனை ஆண்டு காலத்தில் திமுக சந்தித்த சோதனைகள், வேதனைகள், பழிகள் அதிகம். இத்தகைய அவமானங்களையும் பழிகளையும் சுமத்துபவர்களின் ஒரே நோக்கம், திமுகவுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைப் பார்த்து அவர்கள் அடையும் பொறாமையும் கோபமும் மட்டும்தான். திமுக வளர்கிறதே, ஒடுக்கப்பட்டுக் கிடந்த தமிழ்ச் சமுதாயம் உயர்வை அடைகிறதே என்ற வயிற்றெரிச்சலை அத்தகைய மனிதர்கள் காலம் காலமாக வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள். இப்போதும் செய்து வருகிறார்கள். மக்களை நேரில் சந்தித்து, தேர்தல் களத்தில் வெல்ல முடியாதவர்கள் அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்புவதன் மூலமாக திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்.

சமீபகாலமாக இணையதளத்தில் வரும் விமர்சனங்களில், திமுகவையும் எல்லாவற்றிலும் சேர்த்துக் கோத்துவிடும் போக்கை ஒரு உத்தியாகச் சிலர் திட்டமிட்டுச் செய்கிறார்கள். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றும், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றும் சொன்னவர் பேரறிஞர் அண்ணா.’பகுத்தறிவுப் பிரச்சாரம் நடக்கட்டும். அது ஆன்மிகப் பிரச்சாரத்துக்கு எந்தவகையிலும் இடையூறாக இருக்காது’ என்று வழிகாட்டியவர் கலைஞர். இந்த இரண்டு வழிகாட்டும் நெறிமுறைகளின் படியே திமுக இயங்கி வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான ஒரு இணையதளக் காட்சிக்குப் பின்னணியில் திமுகவினர் இருப்பது போன்ற தோற்றத்தைச் சில அரசியல் அரைகுறைகள் இணையதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

‘திமுக திறந்த புத்தகம்’ என்றார் பேரறிஞர் அண்ணா. இதற்கு ஒளிவுமறைவான நோக்கங்கள் இல்லை. தமிழர் மேம்பாடு ஒன்றே இதன் அடிப்படை நோக்கம். தமிழர்கள் மேம்பாடு அடைந்து முன்னேறிவிடக் கூடாது என்பதற்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் காலங்காலமாகச் சொல்லி வந்த அவதூறுகள் இன்றைக்கு மீண்டும் இணையதளங்களில் வாந்தி எடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மக்கள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பழைய பல்லவிகள். திமுகவுக்கு என்று தனித்த வெளிப்படையான கொள்கைகள் உண்டு. இவை யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை. யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்களும் அல்ல. ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனை கொண்ட கொள்கைகள் அவை.

இத்தகைய அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பும் தீயசக்திகளை இணையதளங்களில் இயங்கும் திமுக தோழர்கள் அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் மக்களைத் திசை திருப்புவதற்காகச் செய்யப்படுபவை. கொரோனா பரவலை முன்கூட்டியே தடுக்க முன்யோசனை இல்லாத மத்திய மாநில அரசுகள் மீது மக்களின் கோபம் பாய்ந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த திசை திருப்பும் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறந்தும்போன கொந்தளிப்பு மத்திய, மாநில அரசுகள் மீது திரும்பிவிடக்கூடாது என்பதற்காக இவை செய்யப்படுகின்றன. இந்த தந்திர அரசியலை நம்முடைய தோழர்கள் உணர்ந்து கருத்துகளைச் சொல்ல வேண்டும். அவர்களைப் புறந்தள்ளுங்கள். தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தால் இவர்கள் அனைவரும் பறந்து காணாமல் போய்விடுவார்கள்.

இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *