ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது.. ஐகோர்ட் திட்டவட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூலை-15

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, கடந்த 2017-ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து தமிழக அரசு போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது. இந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் இந்த வீடு கொண்டு வரப்பட்டு வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசரமும் காட்டவில்லை. போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் பிறப்பித்தோம். நிலம் கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை,’ என்றார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜெயலலிதாவுக்கு அதிக தொண்டர்கள் உள்ளதால், தமிழக மக்கள் அவரது இல்லத்துக்கு வருகை தந்து பார்வையிடுவதற்காக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. நினைவு இல்லமாக மாற்றுவது புதிதல்ல. மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் தலையிட முடியாது. உயர் நீதிமன்ற ஆலோசனையை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *