ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை தூக்கிய காங்கிரஸ்..!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதாக காங்சிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர், ஜூலை-14

ராஜஸ்தானில் பெரும்பான்மை பலத்துடன், காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்து வந்தது. அரசைச் சீர்குலைக்க முயற்சி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சச்சின் பைலட்டுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விவகாரத்தால், இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

தனக்கு 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், அசோக் கெலாட் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக மாறிவிட்டது என வெளிப்படையாக அறிவித்தார்.

ஆனால் எங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது என்று அசோக் கெலாட் தரப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே நேற்று ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறாரா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பலன் அளிக்கவில்லை.

இன்று 2-வது நாளாக மீண்டும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. சச்சின் பைலட் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சச்சின் பைலட் மீண்டும் கூட்டத்தை புறக்கணித்தார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட், அவருக்கு ஆதரவான இரண்டு மந்திரிகள் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.

இதையடுத்து, சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதலமைச்சர் பதவியும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *