லடாக் விவகாரம்.. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் படைகளைத் திரும்பப்பெறும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பாக இந்திய-சீன ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதிகள் அளவிலான 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை இன்று (ஜூலை 14) நடைபெற உள்ளது.

டெல்லி, ஜூலை-14

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் கடந்த மே 5-ஆம் தேதி முதல் சீன-இந்திய படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதுதொடா்பாக ராணுவ கமாண்டா் நிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பலனேதும் ஏற்படவில்லை. இந்நிலையில், மோதல் போக்கின் உச்சகட்டமாக கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் கா்னல் உள்பட 20 ராணுவத்தினா் வீர மரணம் அடைந்தனா். சீன தரப்பில் 35 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், அதை அந்நாடு உறுதி செய்யவில்லை. இதையடுத்து கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டுகளுக்கும் இடையே போா்ப்பதற்றம் அதிகரித்தது.

பின்னா் லடாக் பகுதியில் போா்ப் பதற்றத்தை தணிப்பதற்காக ராணுவ மற்றும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தையை மேற்கொள்ள இரு நாடுகளும் முன்வந்தன. அதனடிப்படையில் இந்திய-சீன ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் நிலையிலான பேச்சுவாா்த்தை இதுவரை 3 முறை நடைபெற்றிருந்தது.

பேச்சுவாா்த்தை தொடா்ந்து வந்த போதிலும் இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் படைகளைக் குறைப்பதற்கு பதிலாக குவித்து வந்தன. இச்சூழலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் இரண்டு மணி நேரம் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், கடந்த ஜூன் 29-ஆம் தேதி முதல் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டது. அதுபோல இந்தியாவும், படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்தது.

கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவி வந்த பகுதிகளில் இருந்து படிப் படியாக படைகளை பின்வாங்கச் செய்வதை இரு நாடுகளும் உறுதி செய்தன. இந்நிலையில், இந்தச் சூழ்நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில் இரு நாடுகள் இடையேயான ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடுகளிடையே அடுத்தடுத்த கட்ட பேச்சுவாா்த்தைகள் மூலம், படைகளை முழுமையாக திரும்பப்பெறும் நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று இரு நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரு நாட்டு அரசு உயா் அதிகாரிகள் தரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, எல்லையில் படைகளை முழுமையாக திரும்பப் பெறும் நடவடிக்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்துவது என்றும், இதுதொடா்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை ஒன்றை விரைவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவிலான நான்காம் கட்ட பேச்சுவாா்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல் கிராமத்தில் இன்று நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது குறித்து இருதரப்பும் தீவிர ஆலோசனை நடத்தும் என ராணுவம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிங்கர் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை குறைத்துக்கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *