சூயஸ் குடிநீர் திட்டத்தை பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை-கோவை மாநகராட்சி

கோவை, அக்டோபர்-10

கோவை மாநகராட்சியில் உள்ள 24 மணி நேர குடிநீர் திட்டமான சூயஸ் பற்றி தவறான கருத்துக்கள் பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் ரூ.646.71 கோடி மதிப்பில் 24 மணி நேர குடிநீர் திட்டம் ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்டு சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் கிடைக்கப்பெறும் நன்மைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த மாதம் 24 மற்றும் 25-ம் தேதி நாளிதழ்களில் முழுப்பக்கம் விளம்பரம் வெளியிடப்பட்டு இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால், இந்த திட்டம் குறித்து சில அரசியல் கட்சியினர் அமைப்பினர் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இந்த திட்டத்தை கண்டித்து கடந்த மாதம் இறுதியில் சில அரசியல் கட்சியினர் அமைப்பினர் முழுக்கடை அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 23-ம் தேதி வரவுள்ளது. ஆனால், இந்த திட்டம் தொடர்பாக சில அரசியல் கட்சியினர் அமைப்பினர் தொடர்ச்சியாக தவறான கருத்துக்களை பரப்பி வருவதோடு ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடும் அமைப்பினர் மீது மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *