மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு.. உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஆணை
மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, ஜூலை-13

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
சலோனி குமார் தொடர்ந்த வழக்கிற்கும், தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் நீதிபதி கூறினார்.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.