உலக தரத்தில் உயருகிறது உக்கடம் பெரியகுளம்!!!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுவரை மேற்கொள்ளப்படும் பணிகளே, கோவை மக்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிவராம் நகர் தெற்கு, மேற்கு, ருக்மணி நகர், ஏ.கே.எஸ். நகர், குறிஞ்சி கார்டனில், பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், குறிச்சி கார்டன் பூங்கா, காந்தி பார்க் ஆகியவை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது. இவ்விரு பூங்காக்களும், பொதுமக்களை அதிகம் ஈர்த்துள்ளன. இந்த நிலையில், ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரத்தில் உள்ள செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றை சீரமைத்து எழில்மயமாக்கும் பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  

உக்கடம் பெரியகுளத்தை சீரமைக்க 27 கோடி ரூபாயும், வாலாங்குளத்தை சீரமைக்க 15 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்களை பொலிவூட்டும் பணிகள் படுவேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மார்ச் மாதம் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில், உக்கடம் பெரியகுளத்தை சீரமைக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. குளத்தின் மையப் பகுதியில் தீவுகள் போன்று அமைக்கப்பட்டு பறவைகள் வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. படகுச் சவாரி செய்து குளத்தின் அழகை ரசிக்கும் வகையில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கான வசதி, கேன்டீன், சைக்கிளிங் செல்லவும், நடைபயிற்சி செய்யவும் வசதிகள் செய்யப்பட உள்ளன.

முன்னதாக சேத்துமா வாய்க்காலில் இருந்து பெரியகுளத்துக்கு வரும் நீா் வழிப் பாதையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுத்தமான நீா் மட்டுமே குளத்துக்கு வரும். சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பெரியகுளத்தின் தற்போதைய தோற்றம் மற்றும் கட்டமைப்புகள் குறித்த புகைப்படங்கள் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் படங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 372 ஏக்கா் பரப்பளவிலான குளத்தின் மூலமாக 1,425 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. பெரியகுளத்தை மாதிரியாக கொண்டு அடுத்தபடியாக குறிச்சி குளம் உள்ளிட்ட நகரின் முக்கிய குளங்களை சீரமைக்க திட்டமிட்டுள்ளோம். 2020 மாா்ச் மாதத்தில் பெரியகுளத்தில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *