நீலகிரி மாவட்டத்தில் செய்த சாதனைகள்.. S.P.வேலுமணி பெருமிதம்..!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் கடந்த 9 ஆண்டுகளில், மொத்தம் ரூ. 710 கோடி மதிப்பில் 87,771 பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது! என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை-11

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (10.7.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 447 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில், மாண்புமிகு அம்மா அவர்களின் மனதிற்கு நெருக்கமான நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக 40 ஏக்கர் பரப்பளவில் ரூ. 447.32 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியுள்ள மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என் நன்றிகள்! என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது பதிவில், 11 பேரூராட்சி பகுதிகளில் ரூ. 118 கோடி மதிப்பில் 1,743 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ. 38 கோடி மதிப்பில் 172 சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.ரூ. 5 கோடி மதிப்பில் உதகை நகராட்சியின் சார்பில் உதகை கோடப்பமந்து கால்வாயை சீரமைக்க, செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த 9 ஆண்டுகளில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் மொத்தம் ரூ. 710 கோடி மதிப்பில் 87,771 பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது! உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சி பகுதிகளில் ரூ. 210 கோடி மதிப்பில் 2,715 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.