பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் இந்த நேரத்தில் பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) நடத்துவது நியாயமற்றது. மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி பெற்றதாக அறிவி்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்
டெல்லி, ஜூலை-10

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஏனென்றால், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு பெற்றதாக அறிவித்து, கொரோனா காலத்தில் தேர்வுகளை நடத்தமுடியாமல் ரத்து செய்வதாக அறிவித்தன.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவில் பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிதேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளைத் தேர்வுகளை நடத்தக்கூடாது, தேர்வுகளை ரத்து செய்து, அவர்களின் முந்தைய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரியுள்ளார்.
இதற்காக “ ஸ்பீக்அப்ஃபார்ஸ்டூடன்ஸ்” எனும் ஹேஸ்டேக்கை உருவாக்கி, பிரச்சாரத்தை தொடங்கி, ஒரு வீடியோவையும், தனது ட்விட்டர்பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்
அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசுகையில் “ பல்கலைக்கழக மானியக் குழு குழப்பத்தை உருவாக்கி வருகிறது.கரோனா வைரஸ் பரவும் காலத்தில் பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை யுஜிசி நடத்துவது நியாயமற்றது. மாணவர்களின் குரலை யுஜிசி கேட்க வேண்டும். கொரோனா வைரஸ் ஏற்கெனவே ஏராளமான மக்களை பாதித்துள்ளது. தேர்வுகள் இந்தநேரத்தில் நடந்தால், பள்ளிகள், கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களை தேர்ச்சிபெற்றதாக அறிவித்துள்ளன. ஆனால், யுஜிசி குழப்பத்தை உருவாக்குகிறது. தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் கடந்த கால மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.” எனத் தெரவித்துள்ளார்.