சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை,மகன் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

சென்னை, ஜூலை-10

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் தற்போது முகாமிட்டுள்ளனர். விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு தற்போது வழக்கின் நடைமுறைகள் குறித்து விசாரித்து வருகிறது. இதையடுத்து வழக்கு தொடர்பான கோப்புகளை சிபிசிஐடி அதிகாரிகள்,சிபிஐ வசம் இன்று ஒப்படைக்க உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் சிபிஐ வசம் கோப்புகள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வழங்க உள்ளார்.வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்றதும், முதலில் இருந்து சிபிஐ விசாரணையை தொடங்க உள்ளது. பெண் காவலர் ரேவதி முதல் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.சாத்தான்குளம் சென்று சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி, இதுவரை 10 போலீசாரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *