கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்..!!
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறிய சித்த மருத்துவா் தணிகாசலத்துக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜூலை-10

சென்னை கோயம்பேட்டில் சித்த மருத்துவமனை நடத்தி வந்தவா், மருத்துவா் தணிகாசலம். கொரோனா நோய்த்தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழக முதல்வா் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் தணிகாசலம் கூறும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவின.
இதையடுத்து சுகாதாரத்துறை அளித்த புகாரின்பேரில், நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனர்.
தொடா்ந்து தணிகாசலம் ஜாமீன் கோரி, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், சித்த மருத்துவா் தணிகாசலத்துக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவர் சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளதால் தணிகாச்சலத்தால் வெளியே வர முடியாது.