அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா..!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-10

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் அன்பழகனைத் தொடர்ந்து தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன், மனைவி, மருமகள் மற்றும் கார் ஓட்டுநர் என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி ஜெயந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, அதிமுகவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, கோவை சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *