நீலகிரியில் புதிய மருத்துவக் கல்லூரி.. முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் மத்திய அரசு அனுமதி வழங்கிய 11 கல்லூரிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
நீலகிரி, ஜூலை-10

மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது. அதனடிப்படையில், ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூா், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரத்து 575 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியும் உள்ளன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பதினொன்றாவது புதிய மருத்துவக் கல்லூரிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி துணை இயக்குநர் டாக்டர் கூ. சபிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு 60 சதவீத நிதிபங்களிப்புடனும், மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடனும் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த புதிய மருத்துவக்கல்லூரியுடன், மருத்துவமனை மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
புதிதாக 11 கல்லூரிகள் கட்டப்படும் போது அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 31 ஆக உயரும். புதிய கல்லூரிகளால் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் உயருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.