தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க அனுமதி..சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

தனியார் கல்லூரிகள் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, ஜூலை-9

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்றும், அதேசமயம் பெற்றோர் விருப்பப்பட்டால் பள்ளி கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கல்விக்கட்டணம் தொடர்பான திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உயர் கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறி உள்ளது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் திறப்பு பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *