உ.பியில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கு… பிரபல ரவுடி விகாஸ் துபே கைது
உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை போலீசார் கைது செய்தனர்.
உஜ்ஜைன், ஜூலை-9

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதற்காக நாடு முழுவதும் 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
சம்பவத்தை தொடர்ந்து, விகாஸ் துபேவுக்கு நெருக்கமான 5 பேர் கைது செய்யப்பட்டனர். 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீசார் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ரவுடி விகாஸ் துபே தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவித்த கான்பூர் போலீஸார் பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 மாநில போலீஸார் இணைந்து துபேவை தேடி வந்த நிலையில், உஜ்ஜைனி கோவிலில் விகாஸ் துபேவை சுற்றி வளைத்து போலீஸ் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பிறகு அவர் உ.பி. கொண்டு செல்லப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இன்று துபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில்தான், அவரின் நெருங்கிய கூட்டாளியான அமன் துபே உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.