சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு.. மதச்சார்பின்மை, குடியுரிமை, உள்ளிட்ட பாடங்கள் நீக்கம்

9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதில் மதச்சார்பின்மை, குடியுரிமை, தேசியவாதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

டெல்லி, ஜூலை-8

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தீவிரம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுமையைக் குறைப்பதற்காக 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று தெரிவித்தார்.

30 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு 2020-21 கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டம் இன்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய பாடத்திட்டத்தின்படி, 10-ஆம் வகுப்புக்கு ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, பாலினம், மதம் மற்றும் சாதி, பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகத்துக்கான சவால்கள் உள்ளிட்டவை தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

11-ஆம் வகுப்புக்கு கூட்டாட்சி முறை, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதேபோல், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் தன்மை மாற்றம், இந்தியாவிலுள்ள சமூக இயக்கங்கள் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பான பாடங்களைப் படிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *