இலவச எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..!
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ஜூலை-8

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6.28 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இதுவரை இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் திட்டத்தை ஜூலை 1-ந்தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வரை வழங்க கூடுதலா 13,500 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நவம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி 24% வழங்கப்படும் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியை மேலும் 3 மாதங்களுக்கு செலுத்துவதன் மூலம் ரூ.4,860 கோடி செலவு ஏற்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையை அரசே செலுத்தும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 3 மாத பி.எஃப் சந்தாவில் தொழிலாளர் பங்காக 12%, நிறுவனத்தின் பங்காக 12%ஐ அரசு செலுத்தும்.
நகர்ப்புற ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் குடியிருப்புகளை கட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.