விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.. மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, ஜூலை-8

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் இன்று சென்னையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதல்வர் பழனிசாமி சில முக்கியக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச மின்சார திட்டங்களுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மின்சார உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அது தமிழகத்துக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் ரூ.50.88 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வர் மத்திய அமைச்சரிடம் கூறினார்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கண்டிப்பாக தொடர வேண்டும் என்றும் வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வகை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.