ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு.. சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…!!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி, ஜூலை-8

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரின் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்திம் முடிவெடுத்து ஒரு மாதத்துக்குள் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, தனது தரப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை என்பதால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். இருப்பினும், மணிப்பூர் சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருந்தும், சபாநாயகரால் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ள 7 எம்எல்ஏக்களை சட்டமன்ற அலுவல்களில் கலந்து கொள்ள மணிப்பூர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, சபாநாயகர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *