தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-8

தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாக அமைச்சர் தங்கமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி, மகன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் கலை இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பா.வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பினார்.

ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு அமைச்சர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *