கர்நாடகாவில் சமூக பரவலாக மாறிய கொரோனா.. அமைச்சர் மதுசுவாமி கவலை
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி கவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, ஜூலை-7

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடக மாநித்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி கூறி உள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘தும்கூர் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் மருத்துவ நிலைமை ஆபத்தாக நிலையில் உள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக கவலைப்படுகிறோம். நாங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அதை கட்டுப்படுத்துவது மாவட்ட அதிகாரிகளுக்கு கடினமான பணியாக உள்ளது. எங்கோ நிலைமை கைமீறி செல்கிறது’ என்றார்.
முன்னதாக, மாநில முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று கூறிய நிலையில், அமைச்சர் மதுசாமி முரண்பட்ட கருத்தை வெளிப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.