ஸ்டாலின் போன்ற பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம் – S.P. வேலுமணி

இது தொடர்பாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

முடிந்தவர் சாதிக்கிறார் – முடியாதவர் முச்சந்தியில் நின்று போதிக்கிறார் என்பதற்கு சமகால சாட்சியாகி நிற்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தினமும், நான்கு சுவற்றுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு 4  கேமராக்களை வைத்து, பின்னிருந்து எழுதி தரும் அறிக்கைகளை பேசி நடிப்பதும், அதனை அறிக்கைகளாக வெளியிட்டு அவதூறுகள் பரப்புவதும் தான்,  கொள்ளை நோய் கொரானா காலத்தில் அவர் ஆற்றி வருகின்ற மக்கள் தொண்டாகும்.அதே வேளையில், உண்ணவும் நினையாது,  உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களை பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு பகல்  பாராது போராடி வருகிறார் எளிமைச் சாமானியர் அண்ணன் எடப்பாடியார். உலகறிந்த நடிகரான உயர்திரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட,  ஊடகங்களில்  இயல்பாகத் தோன்றுகிறார் என்றால், எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலினோ, விக்கு வைத்து விதவிதமாய் சிகை அலங்காரம் செய்து கொண்டு, அருவருப்பு அரசியலை  அன்றாடம்  தொடர்கிறார்.

மேலும், கொரோனா  கொள்ளை நோய்க்கு எதிராக  பெரும் போராட்டத்தை நிகழ்த்திவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன்  எடப்பாடியார் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நல் அபிப்ராயத்தை பொறுக்க முடியாமல், வகையற்ற வாதங்களை வார்த்தைகளாக்கி, நெறிமுறையற்ற அறிக்கைகளை நித்தம் ஒன்றாய் விடுத்து வருகிறார் ஸ்டாலின். அதிலும் இப்போது,  அறிக்கை விடுவதற்கான காரணப் பஞ்சம் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்றம்,  நியமனங்கள் குறித்தெல்லாம் அறிக்கை விட்டு,  அதற்காக அவர் சிபிஐ விசாரணை கேட்பதை பார்க்கும் போது,  மகுடத்தின் மீது  வெறிபிடித்த  மனசாட்சி  அற்ற  காரியமாகவே தோன்றுகிறது. 

மத்திய அரசால், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரங்கள் முன்னோடித் திட்டத்தின் கீழ் அதிக அளவில் சீர்மிகு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதனை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான்.மாநில அரசு நிதியுடன் இணைந்து,  2015ம் ஆண்டு துவங்கி 2020 வரையில், 5 ஆண்டுகளுக்கு  ரூ.10,372.93 கோடி மதிப்பீட்டில் 11 சீர்மிகு நகரங்களில் 458 திட்டங்கள்  தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக, மத்திய அரசு, ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவியும், அதற்கு இணையாக தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளித்து வருகிறது. இதற்கான அதிக அளவான ஒப்பந்தப்புள்ளிகளும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும்  2015ம் ஆண்டு தொடங்கி திரு.புகழேந்தி தலைமை பொறியாளர் நகராட்சி நிர்வாகத் துறைக்கு மாறுதல் அளிக்கப்படும் முன்பே  2019ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்துள்ளது. 

ஆனால், திரு.புகழேந்தி 2019ம் ஆண்டு இறுதியில் தான் நகராட்சி நிர்வாகத் துறையில் முதன்மை தலைமை பொறியாளராக  பொறுப்பேற்றுள்ளார்.  எனவே, அவரது நியமனத்தையும், அவரது நியமனத்திற்கு முன்பே நடந்து முடிந்துவிட்ட  ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடுகளை இணைத்து பழிபோடுவது மு.க.ஸ்டாலின் செய்கின்ற மன்னிக்க முடியா பாவ காரியம், அபாண்டம்.தமிழக வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பிற்கும் மிக முக்கியமானதொரு திட்டம் இந்த சீர்மிகு நகரத் திட்டங்கள்  என்றால்  அது மிகையாகாது.  அப்படிப்பட்ட உன்னத திட்டத்தினை திறம்பட  செயல்படுத்துவதே இந்த அரசின் நோக்கமாக இருந்து வருகிறது.

இதுவரையில், இத்திட்டத்திற்கு, கடந்த 2016-17 முதல் 2020-21 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அரசின் பங்காக ரூ.2548 கோடியும்,  மாநில அரசின் பங்காக ரூ.2200 கோடியும் ஆக மொத்தம் இத்திட்டத்திற்காக ரூ.4748 கோடி நிறைவடைந்த பணிகளுக்கும், முடிவுறும் தருவாயில் உள்ள பணிகளுக்கும் மட்டுமே நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  மத்திய அரசால், 75  ரூ  பணிகள் முடிவடைந்தவுடன் படிப்படியாக  நிதி விடுவிக்கப்படும்.நகராட்சி நிர்வாகத் துறையில் சீர்மிகு நகரத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகளுக்குட்பட்டு  இணையதளம் வழியாக (Online Tender only) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகிறது.    

இந்த ஒப்பந்தப்புள்ளியில் இந்தியாவிலிருந்து எந்தப் பகுதியில் இருந்தும் ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலம் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு பெறப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் தொழில் நுட்ப தகுதியினை, முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதி பெற்ற ஒப்பந்தாரர்களின் ஒப்பந்தப்புள்ளிகள் ஒப்பந்தப்புள்ளி குழுவால் ஏற்கப்பட்ட பின்பு, பணி ஆணை வழங்கப்படுகிறது.  இதில் எவ்விதமான முறைகேடுகளும்  இல்லை என்பதை  எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உணரவேண்டும்.

இந்திய அளவில், சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் செயலாக்கத்தில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. சீர்மிகு நகரத் திட்டத்தின் மூலம் எழில்மிகு கட்டமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பான செயல்பாட்டினை மேற்கொண்டதற்கு தேசிய அளவிலான விருதினை கோயம்புத்தூர் மாநகராட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1.7.2020 அன்று கூட சீர்மிகு நகரத் திட்டங்களின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட உக்கடம் பெரிய குளம்  மற்றும் வாலாங்குளம் சீரமைப்பு பணிகள்,  இந்திய நாட்டில் சீர்மிகு நகரத் திட்டம் நடைபெறும் மாநிலங்களுக்கெல்லாம் இப்பணிகள் முன்னோடியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது என  மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.துர்கா ஷங்கர் மிஷ்ரா இஆப., அவர்கள் பாராட்டியுள்ளார்.

 மேலும், கடந்த 9  ஆண்டுகளில்,  இந்திய அளவில் உள்ளாட்சித் துறை அதிகமான சாதனைகளை படைத்துள்ளது.  அவற்றில் சில:-நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இதுவரை 16.28 இலட்சம்  வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகமானதாகும். ஊரகப் பகுதிகளில் இதுவரை 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ்,  2011 -12 ஆம் ஆண்டு முதல், 2019 -2020 ஆம் ஆண்டு வரையில் 9291 கி.மீ நீளமுள்ள 3592 சாலைப் பணிகள் மற்றும் 132 பாலங்கள் ரூ. 4258  கோடி ரூபாய்  மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், ஊரகப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், 99.11 விழுக்காடு குழாய் மூலம் வழங்கப்பட்டு, வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.22.54 இலட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு 2019-20ம் ஆண்டு முடிய  65,930 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளன.       இவற்றோடு, கடந்த 2 ஆண்டுகளில்  தமிழகத்தில் உள்ள அனைத்து 11 சீர்மிகு நகரத் திட்டங்களிலும், இத்திட்டப் பணிகள் முழுவீச்சில் துவங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளது. இந்திய அளவில் தற்போது தமிழகம் 150.43 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளதே இதற்கு சான்றாகும். சீர்மிகு நகரத் திட்டம் போன்ற பிற திட்டங்களை குறித்த காலத்திற்குள்  விரைந்து  செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பதே இந்த அரசின் முக்கியப் பணியாகும். 

இது போன்ற பெரியத் திட்டங்களை,  குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்திட  சிறந்த அனுபவம் வாய்ந்தவர் என்ற வகையில் சென்னை மாநகராட்சியில்  பணிபரிந்த முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.புகழேந்தி என்பவருக்கு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் முதன்மை தலைமைப் பொறியாளராக அயற்பணி அடிப்படையில் பணி மாறுதல்  செய்யப்பட்டார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படவேண்டும் என்ற தமிழக அரசின் நல்ல நோக்கத்தினால், இத்தகைய திட்டப்பணிகளில் அதிக அனுபவம் பெற்று திட்டங்களை செயல்படுத்தக்கூடிய பெருநகர சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமைப் பொறியாளரான திரு.எம். புகழேந்தி என்பவர்  திரு. என். நடராஜன் என்பவரது பணியிடத்தில் அயற்பணி அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டால், அது நல்ல பலன் அளிக்கும் என்பதால் அரசினால் மேற்படி பணியிட மாறுதல் மேற்கொள்ளப்பட்டது.திரு. எம். புகழேந்தி, முதன்மை தலைமை பொறியாளர் அவர்கள் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டபின்,  அவரது பணியிட நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக,  திட்டங்களின் செயல்பாட்டிற்கும்,  விரைவிற்கும் ஏதுவாக திறம்பட பணியாற்றி வருகிறார். அதே வேளையில்,  பணி  மாற்றம் செய்யப்பட்ட திரு.என்.நடராஜன் அவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் அதே தலைமை பொறியாளராக  பணியிட மாறுதல் அளிக்கப்பட்டதோடு, முக்கியத்துவம் வாய்ந்த தரக்கட்டுப்பாட்டுத் துறையில் பணியிடம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட  அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஒரே மாதிரியான பணிகளை மேற்கொள்ளும்பொழுது, பணியில் மூத்த, அதிக அனுபவம்  வாய்ந்த தலைமைப் பொறியாளர்  பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு ஒருபோதும்  விதிகளுக்கு முரணானது அல்ல. 

நகராட்சி நிர்வாகம் என்பது,  ஒரு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும்  பேரூராட்சிகளின்  ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தாய் துறையாகும். அதனால், பொது மக்களின் நலன் கருதி, தகுதி அடிப்படையில் ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதென்பது அத்துறையின் வளர்ச்சிக்கான அடிப்படையாகும். மேலும்,  அத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் அதிமுக்கியத் திட்டங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகும்.இதனை, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த  மு.க.ஸ்டாலின் அறிந்திடாதவராய் அறிக்கை விட்டிருப்பது விந்தைக்கும்  வேதனைக்கும் உரியதாகும்.  என்ன செய்வது?  சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் வேறுபாடு தெரியாதவராக இருக்கும் ஒருவர், மூன்று முதுகலை பட்டங்களைப் பெற்று அமெரிக்காவின் ஏல் பல்கலை கழகம் வரை அறிவுக் கொடி நாட்டி வந்த பேரறிஞர் அண்ணாவின் இருக்கையில் திரு.கருணாநிதியின் மகன் என்கிற பிறப்புச் சான்றிதழ் ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு, திமுகவை ஆக்கிரமித்து அதன் தலைமைப் பதவியில் அமர்ந்திருப்பது  வெட்கக் கேடாகும் நல் நோக்கத்திற்கும், பொது நலனுக்காகவும், தகுதி படைத்த ஒருவரை சிறப்புமிக்க திட்டங்களை மேற்கொள்ளும்  இருக்கையில்  இடம் அமர்த்தியதை  குற்றம் சொல்லும், திருவாளர் ஸ்டாலின், 2006-2011ம் ஆண்டிலான  திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சரின் செயலாளராக இருந்த  திரு. ராஜமாணிக்கத்தையும், திரு.சண்முகநாதன் அவர்களையும் பணி ஓய்விற்கு பிறகு எந்த அடிப்படையில்,  மீண்டும் முதலமைச்சரின் செயலாளராக 5 ஆண்டுகள் பணிபுரிய நியமனம் செய்தார்கள் என்பதையும்,  அதுபோலவே,  திரு.ராஜரத்தினம்,  திரு.தேவராஜ்  ஆகியோர் அதே திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வுக்கு பிறகு மறு பணி நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதையும், காமாலைக் கண் ஸ்டாலின் காரணத்தைச் சொல்லி விளக்குவரா ? அதுபோலவே, அன்றைய திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகராட்சியில் பணி ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் திரு.சக்திவேலுக்கு மீண்டும் மறுநியமனம் செய்தீர்களே,  1998-99ம் ஆண்டில் அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில்,  சாலமன் ஜெயபால் என்பவருக்கு பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு வருடம் பணி நீட்டிப்பு அவருக்கு தரப்பட்டதே அதுபோலவே, தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளராக இருந்த திரு.செல்வராஜ் அவர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகும், அதே இருக்கையில் மூன்று ஆண்டுகள் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதே, இப்போது சொல்லுங்கள் திருவாளர் ஸ்டாலின் அவர்களே,  தங்கத்தை தரம் பார்த்து சொல்லும் உரிமை உறை கல்லுக்குத் தான் உண்டே தவிர,  அது உங்களுக்கு இல்லை.

திறமை படைத்தவர்கள், அரசிற்கு தன்னார்வத்தோடு, பணி  செய்யக் கூடியவர்கள் ஓய்வு பெறும் காலத்திற்கு பிறகும், அவர்களின் பணித்தேவை மற்றும் திறமை கருதி  அவர்களுக்கு பணி நீட்டிப்பும், மறு நியமனங்களும் வழங்கப்படுவது நிர்வாக நடைமுறையில் காலங்காலமாக இருந்து வரும் வாடிக்கைத் தான். ஆறறிவு தலைவர்களுக்கு மத்தியில் நூறறிவு தலைவராக பேரறிவு பொக்கிஷமாக விளங்கிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான், இன்று நிருவாகம்  நியமித்திருக்கும்  இதே திரு.புகழேந்தியை முதன்மை தலைமை பொறியாளராக பணி ஓய்வுக்கு பிறகும் நியமித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திமுக ஆட்சிக் காலத்தில் எல்காட் நிறுவன ஒப்பந்தங்களை தங்களது குடும்பம் சுட்டிக்காட்டியவருக்கு கொடுக்கவில்லை என்பதற்காக, சிறந்த  நிருவாகி என்று பாராட்டுப் பெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ததோடு, அவரது ஐஏஎஸ் படிப்பே போலி என்று குற்றம் சுமத்தி,  பணி நீக்கம் செய்திட்ட படுபாதகத்தைச் செய்தது உங்களின் ஆட்சி.  ஆனால்,  சிறப்பாக பணியாற்றும் திறன்படைத்தோரை  ஓய்வுக்கு பிறகும் உரிய மாடங்களில் அமர்த்தி அவர்களின் பணித் திறனை பயன்படுத்திக்கொள்ளும் கனிவுமிக்க அரசு எங்களின் கழக அரசு என்பதை மக்கள் அறிவார்கள். 

எனவே,  கடந்த 9 ஆண்டுகள் காலத்தில் முக்கடல் சூழ்ந்த பாரதம் முன்வைத்த விருதுகளில்,  உள்ளாட்சித் துறையின் சார்பாக  123 தேசிய விருதுகளை வென்று தாய் தமிழகத்திற்கு தலைப்பாகை சூட்டியிருக்கும், உள்ளாட்சித் துறையை தொடர்ந்து ஸ்டாலின் பழிப்பது தன்னால்  பாழடிக்கப்பட்ட ஒரு துறை இப்படி பாராட்டுகளை குவிக்கிறதே என்னும்  எரிச்சலாலும், இயலாமையாலும் தான் என்பதை தமிழகத்தின் மக்கள் உளமாற அறிவார்கள். எனவே,  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து  தமிழ் உலகை காத்திட  அல்லும் பகலும் அயராது  உழைத்து வரும் எங்கள் எடப்பாடியாரின் நல்லாட்சி தரத்தை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி,  இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய அரசு வரை அனைத்து அமைப்புகளும் பாராட்டி மகிழ்வதை காண பொறுக்காது,   முகம் சுளிக்கும் அறிக்கைகளை வடநாட்டு வாத்தியாரை வைத்து எழுதி அக்கப்போர் நடத்துகிற திமுக தலைவர் ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கெல்லாம் நாங்கள்  ஒருபோதும் அஞ்ச மாட்டோம்.  ஏற்கனவே, முதலமைச்சர் மீதும், அரசின் மீதும் அவதூறு பழிகளைச் சுமத்தி நீதிமன்றம் சென்று மூக்கறுப்பட்டு தாங்கள் போட்ட வழக்கை, தாங்களாகவே திரும்ப பெற்றது திமுக. எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அன்றே எங்களிடம் ஸ்டாலினைப் பற்றி சொல்லும் போது, உலகப் பெரும் ஊழலாம் ஸ்பெக்ட்ரத்தில், நாட்டின் முன்னனி நிறுவனத்தின் கட்டடத்தை வளைத்து, அலைகற்றை ஊழலில் தொடர்புடைய முக்கிய புள்ளியிடமிருந்து குடும்ப தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதும்,  உங்களது ஒட்டுமொத்த  குடும்பமும் அடித்த கொள்ளை பணத்தில், அதில்  ஸ்டாலின் தன் உறவுகளையே  ஊழல் தூண்டிலிக்கு புழுவாக்கிவிட்டு ஒரு இலட்சம் கோடிக்கும் மேலான லஞ்ச பணத்தை  சுருட்டி வைத்திருப்பதை இப்பூவுலக்கிற்கும், எங்களுக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அம்பலப்படுத்தினார்.அந்த ஒரு இலட்சம் கோடியிலிருந்து, இன்று கொரானா காலத்தில் அல்லலுறும் மக்களுக்கு இல்லங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா பத்தாயிரம் ரூபாயை தாங்கள் சுருட்டிய பணத்தை பிரித்து கொடுக்க வேண்டுமென்று பலதரப்பிலும் எழுகின்ற கருத்துக்கு இன்று வரை அறிக்கை அக்கப்போர் நடத்தும் திரு.ஸ்டாலின் பதில் கூற மறுப்பது ஏன்? நான்  கடைக்கோடி தொண்டாக  பாடுப்பட்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அபிமானத்தைப் பெற்று படிப்படியாக உயர்ந்து இன்று  உள்ளாட்சித் துறை அமைச்சராக, கோவை மாவட்ட கழக செயலாளராக  பணியாற்றி வருகிறேன்.  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமத்தும் எந்த குற்றச்சாட்டுகளையும் நான் எதிர்கொள்ளத் தயார். ஆனால்,  அப்பனுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப் பேரன் என வம்சாவழி அரசியலை முன்வைத்து,   இன்று திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினிடம்  கடுகளவு நேர்மை இருக்குமானால், அண்ணா நகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாஷா உள்ளிட்டோரை வைத்து அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ விசாரணையை அவரே கோர வேண்டும். 

ஸ்பெக்ட்ரத்தில் அவருக்கு இருக்கும் பால்வாவுடனான தொடர்புகள் குறித்து விசாரணையை எதிர்கொண்டு தன்னை அவர் நிரபராதி என  நிரூபிக்க வேண்டும்.மேலும், மு.க.ஸ்டாலின் தனது  பொதுக் கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல குற்றச்சாட்டுகளைக் கூறாமல்  தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும்.               

திரு.மு.க ஸ்டாலின் தான்   கூறும்  குற்றச்சாட்டு  புகாரில் ஆதாரம் இருக்கும் என்று அவர் நம்பினால்,   இன்றே என் பதவியினை முழுமனதுடன்  ராஜினாமா செய்ய நான் தயாராக இருக்கிறேன். அதே போல, இன்றே மு.க.ஸ்டாலினும்  தனது பதவிகளை  ராஜினாமா செய்து அவற்றை மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் திமுக  தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை  துறந்துவிட்டு  அரசியலை விட்டே அவர்  ஒதுங்கிப் போக வேண்டும்.  அவர் நிரூபித்துவிட்டால்,  நான் மாண்புமிகு அம்மா அவர்கள் வழங்கிய கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிய  பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத்  தயார்.   இதற்கு தயாரா என்பதை அறிக்கை புலி ஸ்டாலின்  தெளிவுப்படுத்த வேண்டும். பலமுறை இதனை  நான் கேட்டும்,  ஸ்டாலின் பதிலளிக்க தயங்குவதேன் ? பதுங்குவது ஏன் ? அரசு துறை அதிகாரிகளை நிர்வாக வசதிக்காக விதிமுறைகளுக்கு உட்பட்டு மாற்றம் செய்வது என்பது சாதாரணமாக உள்ள நடைமுறையாகும்.

குறிப்பாக சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளை பணி நீட்டிப்பு வழங்கி, அவர்களை ஊக்குவிப்பதும், பயன்படுத்திக்கொள்வதும் அனைத்து காலங்களிலும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். இவ்வளவு ஏன்,  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிகாலத்தில், இதுபோன்று பணி நீட்டிப்பை யாருக்கும் வழங்கியது  இல்லையா? கடந்த தி.மு.க அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் செயல்படுத்தப்படாத நிலையில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் அவர்களின் அரசு உள்ளாட்சி,  வேளாண்மை, சுகாதாரம், கல்வி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அகில இந்திய அளவில் முதன்மை மாநிலமாக திகழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி அவதூறு பரப்பி வருகின்றார்.

இத்தகைய அவதூறுகளை தமிழக மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்துவதால், மக்கள் மன்றத்தில் மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அம்மா அரசிற்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் பெற்ற  இமாலாய வெற்றிக்குப் பிறகு,  இனி தமிழ்நாட்டு அரசியலில் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாக புரிந்து விட்டதால், கோல் அடிக்க முடியாத கோழை, ஆள் அடிப்பான் என்பது போல மாண்புமிகு அம்மா அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், அரசியலில் தன் இருப்பை காட்டிக்கொள்ள உளறல் அறிக்கைகளை வெளியிட்டு  திமுக தலைவர் ஸ்டாலின் உச்சகட்ட விரக்தியை  வெளிப்படுத்துகிறார்.  

எனவே, இதுபோன்ற மலிவான அரசியலை  இனியும் தொடராமல், திரு.மு.க.ஸ்டாலின் தன்னை திருத்திக் கொள்வதுடன், அவதூறு அறிக்கைகளை வெளியிடாமல் இத்தோடு  நிறுத்திக் கொள்வது,   கொரோனா காலத்தில்  அல்லலுறும்  மக்களுக்கு, அவர் செய்கின்ற பெரும் நன்மையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் S.P. வேலுமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *